புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 19, 2018)

சிறுமைப்பட்டவர்கள்

நீதிமொழிகள் 22:22

ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.


எந்த மனுஷனையும் கொள்ளையடிப்பது தேவனுக்கு விரோதமான செயல். ஆனால், ஏழைகளையும், சிறுமைப்பட்டோரைக் குறித்த விவகாரங்களை பற்றி, பரிசுத்த வேதாகமத்திலே, பல இடங்களிலே, தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது, ஏழை எளியவர்களை சிறுமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்படும் போது, கர்த்தருடைய கரம் நீட்டப்படும். எனவே கர்த்தருக்கு எதிர் த்து நிற்காதிருங்கள். கர்த்தர் ஏழைகளுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார் என்று பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருக் கின்றது. ஏழை எளியவர்கள் என்று கூறும் போது, தெருவிலே பிச்சை எடுக்கின்றவர்கள், பஞ்சம் பட்டினி உள்ள நாடுகளில் துன்பப்படுவோரையும், நாளாந்த ஊதியத்தில் பல நெருக்கங்கள் மத்தியில் வாழ்ந்து வருவோரை யும் மட்டும் கருத்தில் கொள்ளக்கூ டாது. உங்கள் வீட்டில், சபையில், வேலை செய்யும் இடத்தில், வெளி இடங்களில் உள்ள ஜனங்களின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பொருளாதார, சமுக அந்தஸ்த்து, கல்வி அறிவு, பதவி, பட்டங்கள் எந்த விதத்திலும் மற்றவர்களை ஒடுக்குவதற்கோ அல்லது மற்றவர்களை ஒடுக்குவதற்கு உடந்தையாகவோ இருக்கக் கூடாது. உதாரணமாக, உங்கள் பிள்ளைபடிக்கும் பாடசாலையில் ஒரு ஏழை மாணவன் படிக்கின்றான். அவனுக்கு உங்கள் மகனைவிட திறமையான குரல்வளம் உண்டு. ஆனால் உங்கள் அந்தஸ்து காரணமாக, கல்லூரி விழாவிலே, அந்த ஏழை மாணவனை தள்ளிவிட்டு உங்கள் மகனை பாட விடுவதை நீங்கள் அறிந்தும் அதற்கு உடன்பட்டால், நீங்கள் உங்கள் சமுக அந்தஸ்தை துஷ்பிரயோகம் செய்பவராக இருப்பீர்கள். சிறிய விடயங்கள் கூட உங்கள் சுத்த மனசாட்சியை, உணர்வற்றுப் போகப்பண்ணும். எனவே, முதலாவதாக நீங்கள் நாளாந்தம் இடைப்படுபவர்களின் விடயங்களில், விழிப்புள்ளவர்களாக, எப்போதும் தேவ நீதி நிறைவேற இடங்கொடுங்கள். 

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, நான் எந்த நிலையில் இருந்தாலும், ஒருபோதும் எவரையும் ஒடுக்காமலும், மற்றவர்களுக்குரியதை நான் எந்த விதத்திலும் எடுத்துக்கொள்ள  உடன்படாதபடிக்கு, என்னை காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 சாமு 12:1-10