புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2018)

முன்மாதிரியான வாழ்க்கை

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


ஒரு சிறு பையன், தன்னுடைய தகப்பன் செய்வதெல்லாவற்றையும் தானும் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமுடையவனாக இருந்தான். தகப்பனார் எங்கு எப்படி உணவு உண்கின்றாரோ, அதே பிரகாரம், அவனும் அதை செய்து கொள்வான். தகப்பனார், செய்தித் தாளை படிக்கும் போது, தானும் ஒரு செய்தித்தாளை எடுத்து, தன்னால் இயன்றவரை அதை வாசித்துக் கொள் வான். ஒரு நாள் வீட்டில் நடந்த விரும்பப்படாத நிகழ்வை கண்ட தகப்ப னார், சற்று கோபம் அடைந்தார். யாவரின் கவனத்தை எடுக்கும்படி, கதவை அடித்து மூடிவிட்டு, உரத்த குரலில், யாவரையும் அமைதியாக இருக்கும் படி கத்தினார். அந்த சிறு பையனோ, நானும் மற்றவர்களின் கவனத்தை எடுப்பதற்கு, கோபத்துடன் உரத்த சத்தமாய் பேச வேண்டும் என்று தன் மன தில் எண்ணிக் கொண்டான். பிள்ளை கள் நடக்க வேண்டிய வழிகளை, அவர்களின் சிறு வயதிலிருந்தே, அவர்களுக்கு சொல்லி கொடுக்கும்படியாக வேதம் அறிவுறுத்துகின் றது. பொதுவாக, பெற்றோர்கள் நல்வழிகளையே பிள்ளைகளுக்கு உபதேசிக்கின்றார்கள். உபதேசம் பண்ணுவது முக்கியமானது. ஆனால், பிள்ளைகளோ, உபதேசத்தைவிட, பெற்றோர்கள் செய்யும் கிரியைகளை நன்கு அவதானிக்கின்றார்கள். நாளடைவில் அவர்க ளும் அதை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். பொய் சொல்லாதே, அதை தேவன் அருவருக்கின்றார் என்று சொல்லிவிட்டு, வீட்டிலோ, சபை யிலோ, வெளியிடங்களிலோ பிள்ளைகள் அறிய, ஒரு தகப்பனார் பொய் சொல்வாராக இருந்தால், இந்தச் சம்பவத்தின் வழியாக அந்த பிள்ளைக்கு தகப்பன் கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?  பொய் சொல்லாதே என்று உபதேசம், ஆனால் வெளியே சென்று பொய் சொல்கின்றார் என்பதை அந்தப் பிள்ளையானவன் தன் மனதிலே பதித்து வைத்திருப்பான். எனவே நாங்கள் எங்கள் சொல்லிலும் செயலிலும் பிள்ளைகளுக்கு மாதிரிகளாக இருந்து, அவர்கள் நடக்க வேண்டிய வழியை வாழ்ந்து காண்பிக்க வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தந்தையே, உம்முடைய வார்த்தையின்படி நான் வாழந்து, என்னை காண்கின்றவர்களுக்கும், பின்பற்றுகின்றவர்களுக்கும், சாட்சியாக இருக்கும்படி என்னை வழிநடத்திச் செல்லும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:14-15