புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2018)

தேவனுக்கு அருவருப்பானவைகள்

நீதிமொழிகள் 19:5

பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.


தன் நண்பனின் இடுக்கண்ணில் துணை நிற்க வேண்டும் என்று எண்ணிய ஒரு இளைஞன், தன் நண்பன் செய்த குற்றத்தை மறைத்து, அதை இன்னுமொரு மாணாக்கன் செய்தான் என்று பொய்சாட்சி கூறினான். இதனால், அந்த அப்பாவி மாணவன், தண்டிக்கப்பட்டு, பாடசாலையில் மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டான். இதனால் பல மாணவர்கள் அவனுடனான நட்பை துண்டித்துவிட்டார்கள். ஆசிரியர்கள் மத்தியில் அவனைக் குறித்திருந்த நல் லெண்ணம் அற்றுப் போய்விட்டது. வாழ்நாள் முழுவதும் ஒரு பழமொழிச் சொல் போல ஆகிவிட்டான். இவை யாவற்றின் ஆரம்பம் பொய்ச்சாட்சியே. சில சந்தர்ப்பங்களிலே மனிதர்கள் சிந்திக்காமல் பொய் சொல்லி விடுகின்றார்கள். அவர்களில் சிலர், பொய் கூறிவிட்டேன் என்று உணர்ந்து கொள்ளும்போது, மனவருத்தப்பட்டு அதை சரிப்படுத்த முயற்சி எடுப்பார்கள். சிலர் மனம்வருந்தி, தங்களைத் தாழ்த்தி, சம்மந்தப்பட்ட வர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள். வேறு சிலர், தேவனிடத்திலே மன்னிப்பை வேண்டிக் கொள்வார்கள். சந்தர்ப்பவசமாக பொய் பேசுவதும் பாவம். அவைகளினாலும் பல பாதிப்புக்கள் உண்டாகின்றன. ஆனால், தங்கள் மனதிலே, திட்டமிட்டு பொய் சாட்சிகளில் பிணைக்கப்படுகின்றவர்கள் மகா பெரிதான துரோகத்தை செய்கின்றார்கள். தங்கள் நண்பர்கள், உறவினரின் நிலையை நியாய ப்படுத்த சபை சங்கங்களில் பொய் சாட்சிகளைக் கூறுகின்றவர்கள், மனிதர் முன்னிலையில் அற்பமான காரியங்களை சாதித்துக் கொள்கின்றார்கள். ஆனால், நீதியை புரட்டுவதற்கு உறுதுணையாக தங்கள் வாயை திறப்பதால், பலருடைய வாழ்க்கையிலே நிரந்திரமான பாதிப்புக்களை உண்டாக்கிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, எந்த சூழ்நிலையிலும், உங்களுடைய பேச்சு, நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ,  நியாயத்தை புரட்டுவதற்கு உங்கள் வாயை திறவாதிருங்கள். கர்த்தர் அருவருக்கின்ற 7 காரியங்களில், (நீதிமொழி கள் 6:16-19) குறிப்பாக பொய்நாவும், பொய்சாட்சியும் உள்ளடங்கியிருக்கின்றது.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் அறிந்தோ அறியாமலோ, நீதி நியாயங்களை புரட்டுவதற்கு, எந்த விதத்திலும் உடந்தையாக இருக்காதபடிக்கு, என் வாழ்வை முற்றிலுமாய் நீர் காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 23:1-2