புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2018)

தீவினைக்கு கைகொடாதிருங்கள்

நீதிமொழிகள் 4:14

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.


இஸ்ரவேலின் தென் ராஜ்யமான யூதாவின் ராஜாவாகிய யோசபாத் உயிரற்ற விக்கிரகங்களாகிய  பாகால்களைத் தேடாமல், தாவீதின் வழிகளில் நடந்ததால், கர்த்தர் யோசபாத்தோடி ருந்தார்;. ஆனால் மிகுதியான இஸ்ரவேலரை ஆண்ட வட ராஜ்யத்தின் ராஜாவாகிய ஆகாப், கர்த்தரை மறந்து, நரகலான உயிரற்ற விக்கிரகங்களுக்கு பலி செலுத்தி வந்தான். கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்த பொல்லாத கிரியைகளைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான். ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: யுத்தத்திற்கு போகின்றேன் என்னோடு வருவீரோ என்று கேட்டான். யோசபாத்;: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்று அவனோடே போனான். போகின்ற காரியம் வாய்க்காது, யுத்தத்திலே தோற்றுப் போவீர்கள்  என்று கர்த்தருடைய தீரக்கதரியாகிய மிகாயா எச்சரித்தும், அவர்கள் அதை பொருட்டாக எண்ணவில்லை;. ஆகாப், தேவனுடைய தீர்க்கதரிசியாகிய மிகாயாவை சிறையிலே போடும்படி கூறி, இரண்டு ராஜாக்களும் யுத்தத்திற்கு சென் றார்கள். கர்த்தர் கூறியபடி ஆகாப் மரணமடைந்தான். யோசபாத்தை கர்த்தர் காப்பாற்றிக் கொண்டு வந்தார்.  அப்பொழுது அனானிவின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. ஆனாலும் தேவனுக்கு முன்பாக உம்முடைய இருதயத்தை நேராக்கினதால், அவர் கிருபை கூர்ந்தார். துணிகரமாக கர்த்தரை பகைத்து, ஜனங்களை கர்த்தரைவிட்டு தூரப்படுத்துவோரோடு நீங்கள் சிநேகிதராக இருக்க முடியாது. துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். எனவே துன்மார்க்கரோடு ஒன்றுபடாதிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே,  பொல்லாதவர்களுடைய வழிகளிலே பொல்லாப்புக்கள் காத்திருக்கும். அந்த வழிகளுக்கு நான் உடன்படாதபடிக்கு என் வாழ்வை நான் காத்துக் கொள்ள என்னை வழி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14-16