புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 01, 2018)

தேவனுடைய நீதியாகும்படி..

2 கொரிந்தியர் 5:21

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (இயேசுவை) நமக்காகப் பாவமாக்கினார்.


ஒரு கிராமத்திலே வாழ்ந்த மனிதன் குற்றம் செய்ததால், ஜனங்கள் அவனை பிடித்து, அந்த கிராமத்தின் மூப்பர்கள் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். அவர்கள் அந்த குற்றச்சாட்டை விசாரித்து, தங்கள் கிராமத்தின் சட்டப்படி, கடும் தண்டனையை வழங்கினார்கள். இந்த விவகாரத்தில் அந்த கிராமத்தின் நீதி நிறைவேற்றப்பட்டது. எங்கள் வாழ்க்கையிலே, தேவ நீதியை நாங்கள் நடப்பிக்க வேண்டும் என்று கூறும்போது, மற்றவன் தவறும் போது, அவனுக்கு, காலதாமதமின்றி, சரியான நியாயத்தீர்ப்பை வழங்க வேண்டும் என்பது பொருள் அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வந்திருந்த நாட்களில், தேவனுடைய நீதி யாவையும் நிறை வேற்றினார் ஆனால் அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பை அந்நாட்களில் வழங்கியிருந்தால் யார் அவர் முன்னிலையில் தப்பிப் பிழைத்திருப்பார்கள். அவருடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க எந்த ஒரு மனிதனுக்கும் தகுதி இல்லை! தேவனுடைய ஒழுங்கு முறைகள் யாவையும் அவருடைய சித்தப்படி செய்வதே தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதாகும். தேவனுடைய ஒழுங்கு முறைகள் பரிசுத்த வேதாகமத்திலே, தேவனுடைய வார்த்தைகள் வழியாக எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒருவன் தவறும் போது, அதை விசாரிக்கும்படி ஒழுங்கு செய்யப்பட்டவர்,  அவனை விசாரித்து அதற்குரிய நியாயத்தை செய்வது, தேவ நீதியின் ஒரு பகுதி. நாங்கள் நீதிமான்களாக எங்களை மற்றவர்களுக்கு காண்பிக்கும்படி அழைக்கப்படவில்லை. கிறிஸ்துவழியாக நீதி மான்களாக வாழ அழைக்கப்பட்டோம். வேதம் கூறுகின்ற நீதிமானுடைய வாழ்க்கை உத்தம மானது. அவன் ஏழை எளியவர்களுக்கு இரங்குவான். அவன் உள்ளத்தில் தாழ்மையுள்ளவன். அவன் கர்த்தரை எப்போதும் கனப்படுத்துவான். எனவே இந்த உலகத்தின் நீதியை பின்பற்றாமல், கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக வாழ்வோம். 

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, பாவியாக வாழ்ந்த என்னை, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வழியாக அவருக்குள் நீதிமானாக மாற்றினீர். அதை உணர்ந்து, உம்முடைய நீதியை நிறைவேற்ற கிருபை செய்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-5

Category Tags: