புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 29, 2018)

தாழ்மையுள்ள சிந்தையோடு...

யாக்கோபு 4:6

தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே சமுதாயத்தினால் பாவிகள் என்று தள்ளப்பட்டவர்கள், விடுதலை யடையும்படி அவரைத் தேடி வந்தார்கள். விடுதலை கொடுக்கும்படி இயேசுவும் அவர்களைத் தேடிச் சென்றார். துன்மார்க்க வழிகளில் பணம் சம்பாதித்தவர்கள், கடும் நோயினால் பாதிக்கப்பட்டு மரண அவஸ்தைப்படுபவர்கள், தொற்று நோயினால் சமுதாயத்தைவிட்டு அகற் றப்பட்டவர்கள், அசுத்த ஆவிகளின் கட்டுக்களிலே வாழ்ந்தவர்கள், பிறப்பிலே ஊனமானோர்கள், விபச்சாரத்தினால் அழிந்து கொண்டிருப்போர் இன்னும் பலவிதமான பாவ பழக் கங்களுக்கு அடிமைப்பட்டோர் யாவரையும் அவர் விடுதலையாக்கினார். இவர்கள் தங்களை தாழ்த்தி விடுதலை அடையும்படியாய் விரும்பினார்கள். ஆனால், மதவைராக்கியக் கட்டினால் பெருமை கொண்டு, தாங்கள் பரிசுத்தவான்கள் என்று வாழ்ந்த யூதமதத் தலைவர்கள், சுய நீதியினால் நிறைந்தவர்களாய், மேட்டிமையான எண்ணங்கொண்டதால்,  தங்களை தாழ்த்த விரும்பவில்லை. அதனால் தங்கள் மத்தியில் வந்திருந்த, மீட்பராகிய இயேசுவை கண்ணிருந்தும் காணமுடியா மலும், காதுகள் இருந்தும் கேட்கமுடியாமலும், இருதயத்தில் உணரமு டியாமலும் போனார்கள். எப்படிப்பட்ட நற்கிரியைகளை செய்தாலும் நாங்கள் அவற்றை தாழ்மையுள்ள இருதயத்துடன் செய்ய வேண்டும். பெருமையுடன்கூடிய எந்தக் கிரியைகளும் வெறும் மதவைராக்கிய த்தை தரும் ஆனால் அவை தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  எனவே, நீங்கள் யாராக இருந்தாலும், தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள், பெருமை நிறைந்த மதவைராக்கியங்களை விட்டுவிடுங்கள். 

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய கிருபையினாலே நிலை நிற்கின்றேன் என்பதை நான் உணர்ந்து, தாழ்மையுள்ள சிந்தையோடு, உம்முடைய நியமங்களை கைக்கொள்ள என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:11