புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2018)

தரித்திரரை மறவாதிருங்கள்

கலாத்தியர் 2:10

தரித்திரரை நினைத்துக் கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்ப டிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத் துள்ளவனாயிருந்தேன்.


தேவன் எங்களை ஆசீர்வதித்திருக்கின்றார் எனவே நாங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என ஒரு மனிதன் கூறினான். இன்று மனிதர்கள் மத்தியிலே பொதுவாக தேவன் எம்மை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறும் போது, கல்வி, தொழில், வீடு, பொருள், அந்தஸ்து, பொருளாதாரம், போன்றவற்றை மையமாக வைத்தே பேசுகின்றார்கள். தேவன், இவைகளால் மனிதர்களை ஆசீர்வதிக்கின்றவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தேவனுடைய மனுஷனாகிய பவுல் என்பவருக்கு இவை யாவும் இரு ந்தும், கிறிஸ்துவை அறியும் மேன்மை க்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் என்று கூறினார். எனவே, எங்கள் கண் கள் காணும் உலக ஆசீர்வாதங்களை விட, பிரகாசமுள்ள மனக்கண்களால் மாத்திரம் காணக்கூடிய கிறிஸ்துவின் மேன்மையான ஆசீர்வாதங்கள் எங்களுக்காக வைக்கப்பட்டிருக்கின் றது. அதனால் உங்களிடம் இருக்கும் யாவற்றையும் நீங்கள் விட்டு விட்டு, துறவியாக மாறவேண்டும் என்பது பொருள் அல்ல. எப்போதும் ஏழைகளை நினைத்துக் கொள்ளுங்கள். சில வேளைகளிலே, கர்த்தரை அறிந்தவர்கள், பல இலட்சங்களை செலவு செய்து தங்கள் குடும்பங்களின் முக்கிய நிகழ்வுகளை கொண்டாடுகின்றார்கள். ஆனால், தன்னுடைய திருமணத்திற்கு, சாதாரண ஆடை கூட வேண்டுவதற்கு வழியில்லாமல் ஏங்கும் ஏழைகள் பலர் இருக்கின்றார்கள். எனவே பரலோக மேன்மையை நாடிச் செல்லும் நாங்கள், எப்போதும் ஏழைகளுக்கு தாராளமாய் உதவி செய்ய வேண்டும். தரித்திரரை விசாரிக்கும்படிக்கு, ஆதிச் திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட தேவனுடைய தாசர்களாகிய யாக்கோபு, பேதுரு, யோவான் என்பவர்கள், தேவனுடைய ஊழியக்காரனாகிய பவுலுக்கு அறிவுரை கூறினார்கள். இந்த விடயத்தைக் குறித்து நீங்களும் கருத்துள்ளவர்ளாயிருங்கள். 

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, என்னிடம் இருப்பதெல்லாம் உம்முடையது என்பதை உணர்ந்து, ஏழை எளியவர்களை எப்போதும் விசாரிக்கும்படியான இரக்கமுள்ள உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 15:23-25