புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2018)

மகா பரிசுத்த தேவன்

உபாகமம் 27:15

கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக் கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக.


சலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமின் நாட்களிலே, இஸ்ர வேல் ராஜ்யம் வடராஜ்யம், தென் ராஜ்யம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. தேவன் தாமே யெரொபெயாம்  என்பவனை வடராஜத்திற்கு ராஜாவாக ஏற்படுத்தி, நீ என் வழிகளில் நடந்தால், நான் உன் ஆட்சியை உன் சந்ததிக்கு நிலைவரப்படுத்துவேன் என்று வாக்கு கொடுத்தார். ஆனால் இந்த யெரொபெயாம், தன் புத்தியின் மேல் சார்ந்து கொண் டான்.  கர்த்தருடைய ஆலயம், தென் ராஜ்யத்திலுள்ள எருசலேமில் இருந்ததாலும், ஜனங்கள் அங்கே பலி செலு த்தப் போனால், மனம் மாறி, தென் ராஜ்யத்தின் ராஜாவாகிய ரெகொபெயாமை சார்ந்து கொள்வார்கள் என்று பயந்தான். அதனால்,இரண்டு பொன் கன்றுக் குட்டிகளை செய்து, அதுவே உங்கள் தேவர்கள் என்று கூறி, அந்த விக்கிரகத்தை வணங்கும்படி செய்தான். அதுவுமல்லாமல், தேவனுடைய நியமனத்திற்கு விரோதமாக, ஆசாரிய கோத்திரமாகிய லேவி கோத்திரத்திலிலாதவர்களில், ஈனமானவர்களை ஆசா ரியர்களாக்கினான். தேவன் இவனுக்கு கொடுத்த ராஜ்யத்தை, தன்னுடைய புத்திக்கு எட்டியபடி, கர்த்தரைவிட்டு ஜனங்களை தூரப்படுத் தினால், ராஜ்யத்தைக் காத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். அதனால், கர்த்தருக்கு முன்பாக மகா பயங்கரமான பாவியானான். தன் வழிகள் அருவருப்பானவைகள் என்று அவன் அறிந்த போதும், மனந்திரும்புவதற்கு மனதில்லாமல். நித்திய சாபத்தை சம்பாதித்துக் கொண்டான். தேவன் மகா பரிசுத்தர்! அசுத்தமானவைகளையும், அருவருப்பானவைகளையும் உங்களை விட்டு அகற்றிவிடுங்கள்.

ஜெபம்:

மகா பரிசுத்தமுள்ள தேவனே, நீர் உம்முடைய வாக்கிலே உண்மையுள்ளவர். உமக்கு அருவருப்பாக தோன்றுகின்ற யாவையும் என்னைவிட்டு அகற்றி, உமக்கு பிரியமான வழியில் நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோசெயர் 3:5