புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2018)

நித்தியமானவைகளை நாடுவோம்

2 கொரிந்தியர் 4:18

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.


இந்த உலகத்திலே காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள். எங் கள் கண்களால் காணக்கூடியவைகள் யாவும் ஒழிந்துபோகும். மனிதனுடைய சரீரமும் அழிந்து போகும். அந்த நாளிலே அவன் யோசனை களும், தன் சரீரத்தை திருப்திப்படுத்த அவன் வாஞ்சிக்கும் மாம்ச சிந்தைகள் யாவும் ஒழிந்து போகும். எனவே மனிதன் இந்த உலக த்திலே கொண்டுள்ள காணப்படுகின்ற சரீரம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. காணப்படுகின்றவைகள், காணாதவைகளை  சுதந்தரித்துக் கொள்வதில்லை. மாம்ச கண்களால் காணப் படாதவைகளோ நித்தியமானவைகள். காணப்படாத பரலோகம் நித்தியமானது. பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய தூய ஆவியினாலே, எங்களுக்கு தரும் பிரகாசமுள்ள மனக்கண்க ளாலே மாத்திரம், காணப்படாதவைகளை உணர்ந்து விசுவாசிக்க முடியும். எங்கள் ஆத்துமாவை, எங்கள் மாம்ச கண்களால் காண முடியாது. பிதாவினுடைய சித்தத்தை நிறைவேற்று கின்ற எந்த ஆத்துமாவும், நாங்கள் இப்போது காணாததும், இனிமேல் நாங்கள் சென்றடைகின்றதுமான பரலோகத்திலே நித்திய வாழ்வை அடையும். பாவத்தோடு மரிக்கின்ற ஆத்துமா, நரகத்திலே நித்திய ஆக்கினையை அடையும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. காணப்படாத எங்கள் ஆத்துமாவிலே, நாங்கள் காணாத தூய ஆவி யானவர்தாமே ஆளுகை செய்தால், எங்கள் மனக் கண்கள் பிரகாச முள்ளதாயிருக்கும். புறம்பான மனிதனாகிய எங்கள் சரீரமும் அது வாஞ்சிக்கும் மாம்ச இச்சைகளும் அழிந்து போகட்டும். தேவனுடைய திவ்விய சுபாவங்கள் உள்ளான மனிதனிலே தினமும் பெருகட்டும். காணாததும், நித்தியமானதுமான தேவனுடைய ராஜ்யத்திற்கு எங்கள் வாழ்க்கையிலே முதலிடம் கொடுப்போம்.

ஜெபம்:

என்றும் மாறாத பரலோக தேவனே, அநித்தியமான உலகிலே வாழும் நாங்கள்,  நித்தியமான பரலோக ராஜ்யத்திற்குரியவைகளை நாடித் தேடும், வாஞ்சையையும், பிரகாசமுள்ள மனக்கண்களையும் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:17-19